Wednesday, February 29, 2012

"சென்செக்ஸ்' 285 புள்ளிகள் உயர்வு"



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று நன்கு இருந்தது. திங்கள்கிழமையன்று வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில், 2.5 சதவீதம் சரிவைக் கண்டது. இந் நிலையில், நேற்றைய வர்த்தகம் 1.6 சதவீத அள விற்கு ஏற்றம் கண்டது.
சர்வதேச நிலவரங்களுக்கிடையிலும், சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, நேற்றைய வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததை யடுத்து, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் முன்னேற்றம் கண்டது. 
இது தவிர, நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டாவது திட்டத்திற்கு, கிரீஸ் பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருந்தது. 
இருப்பினும், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, டி.சி.எஸ்., விப்ரோ, மற்றும் மருந்து துறையைச் சேர்ந்த சன் பார்மா உள்ளிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,வர்த்தகம் முடியும் போது,285.37 புள்ளிகள் அதிகரித்து,17,731.12 புள்ளி களில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17, 776.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,530.44 புள்ளிகள் வரையிலும் சென்றது. 
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 94.30 புள்ளிகள் உயர்ந்து, 5,375.50 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,391.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,306.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.