Tuesday, February 28, 2012

நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கான கடன் அங்கீகாரம்




இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன நட்டமடையாத நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கான கடனை அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி கொஷி மாதாய், பிஸ் பெஸ்டிற்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்றுக் கொள்வதற்காக செய்துகொண்ட உடன்படிக்கைகள் காரணமாகவே இலங்கையில் வட்டி வீதமும் நாணயமாற்று வீதமும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்துகின்றன.

அதன் காரணமாகவே எரிபொருட்களின் விலையும் மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கம் மீது குற்றம்சுமத்திவருகின்றன.

இந்த விடயம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ஹொசியிடம் வினவினோம்.

அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ள கடன்சார் செயற்திட்டங்களின் பிரகாரம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும், மின்சாரசபையையும் நட்டமடையாத நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்பது அதன் நிபந்தனைகளுல் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதனை செயற்படுத்துகையில் பாரியளவில் எரிபொருட்களின் விலை அதிகரித்தால், சந்தை நிலவரத்திற்கமைய அதனை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டமொன்று இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் அந்த செலவுகளை தாங்கிக் கொள்ள முடியாது என்பதுடன் மறுபுறத்தில் இவ்வாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் செயற்படுமாயின், அரசாங்கம் பாரிய நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்று கொஷி மாதாய் தெரிவித்தார்.

அந்த நிதியை திரட்டிக் கொள்வதற்கு மேலும் பணம் அச்சிட வேண்டியேற்படும் என்றும் இதன்போது பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

கடன்பெற முயற்சிக்கும் பட்சத்தில் வட்டி வீதம் அதிகரிக்கலாம் எனக் குறிப்பிட்ட கொஷி மாதாய், அரசாங்கத்திற்கு மாற்று வழி இல்லாத நிலையில் செலவுகளை ஈடு செய்யக்கூடிய விலையையாவது நிர்ணயிக்க வேண்டியேற்படும் என மேலும் கூறினார்
.