Saturday, February 18, 2012

தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை.


தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய மொத்த விலைச்சுட்டெண்ணின் பெறுமதி 1.91 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மிலங்கா விலைச்சுட்டெண்ணில் 1.84 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பங்கு சந்தையின் இன்றைய பரிவர்த்தனையின் நிறைவில் மொத்த விலைச் சுட்டெண் முன்னைய நாளுடன் ஒப்பிடுகையில் 106.48 அலகுகளால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் பங்கு விலைச் சுட்டெண் 5454.95 ஆகப் பதிவானது.

இது இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த விலைச்சுட்டெண்ணில் பதிவான மிக குறைந்த பெறுதியாகவும் கருதப்படுகின்றது.

மிலங்கா விலைச்சுட்டெண்ணும் இன்று 84.20 பூஜ்ஜியம் அலகுகளால் வீழ்ச்சியடைந்ததுடன் அதன் பெறுமதி 4721.79 அலகுகளாகப் பதிவானது.

கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை காட்டுகின்ற கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்ணில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் கொழும்பு பங்குச் சந்தை உலகின் முதலிடத்துக்கு உயர்ந்தது.

இதன்போது மொத்த விலைச்சுட்டெண்ணின் பெறுமதி 7816 அலகுகளாகவும்,மிலங்கா விலைச்சுட்டெண்ணின் பெறுமதி 7327 அலகுகளாகவும் வளர்ச்சியடைந்திருந்தன.

எனினும் கடந்த வருட இறுதியில் மொத்த விலைச்சுட்டெண் 22 வீதத்தாலும் மிலங்கா விலைச்சுட்டெண் 28 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்தன.

"சென்செக்ஸ்' 135 புள்ளிகள் அதிகரிப்பு


மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்களால், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை வாங்கியதையடுத்து, இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. 

மேலும், கிரீஸ் நாட்டிற்கு வழங்கப்பட்ட அவசர கால கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பது பற்றி ஐரோப் பா பரிசீலித்து வருகிறது. இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இது தவிர, அமெரிக் கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனம், உலோகம், ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
அன்னிய நிதிநிறுவனங்கள், சென்ற வியாழன்று 184கோடி ரூபாய் மதிப்பிற்கு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தன. நடப்பு மாதத்தில் இதுவரையிலுமாக, இந்நிறுவனங்கள் 11 ஆயிரத்து 612 கோடி ரூபாய் முதலீடு மேற்கொண் டுள்ளன. இது, கடந்த ஜனவரி மாதத்தில் 10 ஆயிரத்து 358கோடி ரூபாயாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 135.36 புள்ளிகள் அதிகரித்து, 18,289.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,423.06 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,234.56 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி' 42.35 புள்ளிகள் உயர்ந்து, 5,564.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,606.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,545.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.