Tuesday, February 28, 2012

நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கான கடன் அங்கீகாரம்




இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன நட்டமடையாத நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கான கடனை அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி கொஷி மாதாய், பிஸ் பெஸ்டிற்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்றுக் கொள்வதற்காக செய்துகொண்ட உடன்படிக்கைகள் காரணமாகவே இலங்கையில் வட்டி வீதமும் நாணயமாற்று வீதமும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்துகின்றன.

அதன் காரணமாகவே எரிபொருட்களின் விலையும் மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கம் மீது குற்றம்சுமத்திவருகின்றன.

இந்த விடயம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ஹொசியிடம் வினவினோம்.

அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ள கடன்சார் செயற்திட்டங்களின் பிரகாரம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும், மின்சாரசபையையும் நட்டமடையாத நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்பது அதன் நிபந்தனைகளுல் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதனை செயற்படுத்துகையில் பாரியளவில் எரிபொருட்களின் விலை அதிகரித்தால், சந்தை நிலவரத்திற்கமைய அதனை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டமொன்று இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் அந்த செலவுகளை தாங்கிக் கொள்ள முடியாது என்பதுடன் மறுபுறத்தில் இவ்வாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் செயற்படுமாயின், அரசாங்கம் பாரிய நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்று கொஷி மாதாய் தெரிவித்தார்.

அந்த நிதியை திரட்டிக் கொள்வதற்கு மேலும் பணம் அச்சிட வேண்டியேற்படும் என்றும் இதன்போது பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

கடன்பெற முயற்சிக்கும் பட்சத்தில் வட்டி வீதம் அதிகரிக்கலாம் எனக் குறிப்பிட்ட கொஷி மாதாய், அரசாங்கத்திற்கு மாற்று வழி இல்லாத நிலையில் செலவுகளை ஈடு செய்யக்கூடிய விலையையாவது நிர்ணயிக்க வேண்டியேற்படும் என மேலும் கூறினார்
.

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.63 புள்ளிகள் அதிகரித்து 17568.38 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19.35 புள்ளிகள் அதிகரித்து 5300.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படாததால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.

சென்செக்ஸ்' 478 புள்ளிகள் வீழ்ச்சி



மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படாததால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.
இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள், உத்தரபிரதேச மாநில தேர்தல் போன்றவற்றால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இது தவிர, லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில், பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை மிகவும் குறைந்து போனது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 477.82 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,445.75 புள்ளிகளில் நிலைபெற்றது. 
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,975.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,381.64 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.டி.சி., மற்றும் சன்பார்மா ஆகிய இரு நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 148.10 புள்ளிகள் சரிவடைந்து, 5,281.20 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,449.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,268.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.