Thursday, February 23, 2012

சரிவுடன் முடிந்தது வர்த்தகம்


மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66.75 புள்ளிகள் குறைந்து 18078.50 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.05 புள்ளிகள் குறைந்து 5483.30 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, பார்தி ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

"சென்செக்ஸ்' 283 புள்ளிகள் வீழ்ச்சி


மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மீண்டும் சுணக்கம் கண்டது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் பல முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்து போனது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாகவும், வரும் நிதியாண்டில், 7.5-8 சதவீதமாகவும் இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்தது. இதையடுத்து, மதியத்திற்கு பிறகு வர்த்தகம் அதிக சரிவிலிருந்து, சற்று முன்னேற்றம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 283.36 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,145.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,523.78 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,095.81 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்து. இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 101.80 புள்ளிகள்குறைந்து, 5,505.35 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,629.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,491.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.