நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்.

                        நிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது.

                       பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் ஒவ்வொருவரும், 'நிகர சொத்து மதிப்பு' (NAV) குறித்த தெளிவினைப் பெற்றிருத்தல் அவசியம். ஒரு அறிவுக்கூர்மையுள்ள விவரமறிந்த முதலீட்டாளருக்கு NAV எவ்வளவு பயனளிக்குமோ அதைவிட அதிகமாக அதைப்பற்றி ஏதும் அறியாத முதலீட்டாளருக்கு அது ஊறு செய்யவும் கூடும். 

                        நிகர சொத்து என்பது ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களில் (Total Assets) இருந்து அந்நிறுவனத்தின் கடன்களைக் (Liabilities) கழித்தது போக மிச்சமுள்ள சொத்துக்கள். அதாவது, முதலீடுகள், பிற நிறுவனங்களில் வாங்கியுள்ள பங்குகள், சேமிப்புகள், வழங்கிய கடன்கள், நிலம் மற்றும் கட்டிடங்கள், வங்கிக்கையிருப்பு இவை அனைத்தும் சொத்துக்களின் கீழ் வகைப்படுத்தப்படும். இவற்றின் மொத்த மதிப்பு கணக்கிடப்படும். பின், அந்த நிறுவனத்தில் பங்குதாரர்கள் செய்துள்ள முதலீடு, நிறுவனம் வாங்கியுள்ள கடன்களின் நிலுவைத்தொகைகள், அதாவது பிறருக்குக் கொடுக்கப்படவேண்டியவை அனைத்தும் நிறுவனத்திற்குப் பற்று ஆகும். மொத்த சொத்து மதிப்பில், பற்று இனங்களைக் கழித்தபின் மீதமிருப்பது நிகர சொத்து ஆகும். இந்த நிகர சொத்தினை, நிறுவனத்தில் முதலீடு செய்யப்பெற்றிருக்கும் மொத்தப் பங்குகளால் வகுக்கும்பொழுது கிடைப்பதே நிகர சொத்து மதிப்பு, அதாவது NAV என்று அழைக்கப்படுகின்றது.

                    பரஸ்பர நிதியங்களைப் பொறுத்தவரை, பொதுவாக அந்த நிறுவனம் முதலீடு செய்திருக்கும் பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றின் சந்தை மதிப்பு (Market Value) கணக்கிடப்படுகின்றது. இது திறந்த முனை நிதித்திட்டங்களின் (Open Ended Schemes) மதிப்பைக் காண உதவுவதாகும். மூடிய முனை நிதித்திட்டங்களுக்கும் (Closed Ended Schemes) NAV உண்டெனினும் அது இந்த முறையில் கணக்கிடப்படுவது இல்லை. இந்த சந்தை மதிப்பினை, அந்தத் திட்டத்தின் கீழ் விற்கப்பட்டுள்ள மொத்தப் பங்குகளால் (அலகுகளால்) வகுக்கும்பொழுது, அக்குறிப்பிட்ட அலகு (Unit)அல்லது பங்குக்கான நிகர சொத்து மதிப்பு கிடைக்கிறது. முதலீட்டு நிறுவனமானது, தங்கள் நிறுவனத்தின் அலகுகளை, NAVயை விடக்குறைந்த விலையிலோ (Discounted Rate) அதிக விலையிலோ (Premium) விற்பனை செய்யலாம். 

                   ஆனால் பொதுமக்கள் பலர் இந்த நிகர சொத்து மதிப்பு என்ற கருத்தை, அதன் கணக்கிடும் முறையை, அதன் கூறுகளை (Concepts) சரிவரப் புரிந்துகொள்வதில்லை. பலர் குறைந்த NAV சிறந்தது என்றும் அதிக NAV அபாயகரமானது என்றும் கூடக் கருதுவது வியப்பிற்குரியது. பரஸ்பர நிதியங்களின் அலகுகளின் NAVயும் , பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் பங்குகளின் மதிப்பும் ஒரே விதமானது என்றும் பலர் கருதுகின்றனர். ஆனால், இது உண்மையல்ல . இவை இரண்டும் வெவ்வேறானவை. 

                 பங்குகளின் மதிப்பு என்பது சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கும் சுழற்சிக்கும் ஏற்பட மாறுபடக்கூடியது. நிறுவனங்களின் எதிர்கால வாய்ப்பு, சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளுக்கு உள்ள தேவை, இவற்றுடன் ஒரு நாட்டின் அல்லது ஒரு குறிப்பிட்ட தொழில் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த அனுமானங்கள் இவை அனைத்தையும் பொறுத்தது பங்குகளின் விலை. முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில்நுணுக்க ஆய்வினை (Technical Analysis), வரைபடங்களை (Charts) , அட்டவணைகளைப் (Tables) பயன்படுத்தி, பங்குகளின் மதிப்பைக் கணக்கிட்டு அதில் முதலீடு செய்கின்றனர். பல சமயங்களில் வதந்திகளை நம்பிக்கூட விலை ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது.

                 ஆனால் நிகர சொத்து மதிப்பு என்பது அத்தகையதல்ல. இதுவும் தினப்படி கணக்கிடப்படுகிறது, நாள்தோறும் மாற்றமடைகிறது என்பது ஒன்றுதான் பங்குகளின் மதிப்பிற்கும், பரஸ்பர நிதிய அலகுகளின் NAVக்கும் உள்ள ஒற்றுமை. மற்றபடி NAVயானது ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நிதித்திட்டத்தின் கீழ் செய்திருக்கும் முதலீடுகளின் அன்றைய தின சந்தை மதிப்பு, அந்தக் குறிப்பிட்ட நிதித்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை இரண்டுக்கும் உள்ள விகிதமாகும்.

                 எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், 'ABC பரஸ்பர நிதியமானது, தமது X என்ற திட்டத்தின் கீழ் செய்திருக்கும் முதலீடுகளின் மதிப்பு ரூபாய் ஐம்பது இலட்சம், அந்தத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சம் எனில், அந்தக் குறிப்பிட்ட X என்ற திட்டத்தின் கீழுள்ள அலகுகளின் NAV = 50 லட்சம் / 50 ஆயிரம்; அதாவது ஒரு அலகின் NAV ரூ. நூறு ஆகும்.

                  இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி. பரஸ்பர நிதி நிறுவனமொன்றின் ஒரு திட்டமான 'அ' வின் NAV ரூ.20 எனவும், மற்றொரு திட்டமான் 'க' வின் NAV ரூ. 25 என்றும் கொண்டால், அதற்கு என்ன பொருள்? இந்த விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இப்பொழுது வலுவாக உள்ள திட்டம் எது?

                  இதற்கான விடை மிகவும் சுலபமானது. இரண்டு திட்டத்திலும் உள்ள அலகுகள் ஆயிரம் என்று கொள்வோம். திட்டம் 'அ'வின் தொகுப்பு நிதி (Corpus Fund), அதாவது நிகர சொத்தானது ரூ. 20 X 1000 = 20000 ரூபாய். இதுவே 'க' என்ற திட்டத்தின் நிகர சொத்து (தொகுப்பு நிதி) ரூ. 25 X 1000 = 25000 ரூபாய். 

இப்பொழுது உங்கள் பதில் என்னவாக இருக்கவேண்டும். 'திட்டம் க' தானே?

அப்படியானால், நீங்கள் முதலீடு செய்ய 'க' என்ற திட்டத்தைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டுமா? கட்டாயமில்லை.
ஆனால், இங்கு ஒரு தகவலைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். நிகர சொத்து மதிப்பு என்பது கடந்தகாலச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் ஒன்று. கடந்தகாலத்தில் மிக மோசமாகச் செயல்பட்ட நிதித்திட்டம் வருங்காலத்தில் பெரும் லாபம் ஈட்டாது எனவோ, இப்பொழுது மிகுந்த லாபம் ஈட்டிவரும் ஒரு திட்டம் வருங்காலத்திலும் லாபம்தான் ஈட்டும் எனவோ உறுதியாகக் கூற இயலாது.

                 எனவே, ஒரு பரஸ்பர நிதியத்தை, அதில் உள்ள நிதித் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது, அதன் நிகர சொத்தினை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்ளாமல், அந்நிறுவனத்தின் தரம், அதன் நிதிநிர்வாகக்குழு, அவர்களது கடந்தகாலச் செயல்பாடுகள், அந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் அவர்கள் முதலீடு செய்யவிருக்கும் பங்குகளின் வகை (அதாவது பங்குச்சந்தையிலா, கடன் பத்திரங்களிலா, இரண்டிலுமே எனில் அவற்றின் விகிதாசாரம் என்ன) இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளுவது அவசியம்...