Tuesday, February 21, 2012

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்


மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது.வார வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு வர்த்தகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்றத்துடன் முடிந்திருந்த வர்த்தகம் இன்று எற்ற இறக்கத்துடன் தெடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 24.40 புள்ளிகள் அதிகரித்து 18313.75 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 2.40 புள்ளிகள் குறைந்து 5561.90 புள்ளிகளோடு காணப் பட்டது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு...பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை


மும்பை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு திங்கள்கிழமையன்று விடுமுறையாக இருந்தது. இதனால், மேற்கண்ட இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று பங்கு வியாபாரம் நடைபெறவில்லை. மும்பை தங்கம், வெள்ளி மார்க்கெட்டுகளும் விடுமுறை அறிவித்திருந்தன.கடந்த வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 135.36 புள்ளிகள் அதிகரித்து 18,289.35 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 42.35 புள்ளிகள் உயர்ந்து 5,564.30 புள்ளிகளிலும் நிலைபெற்றன.நேற்று உலகின் இதர பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதனால், இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருக்கக் கூடும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

முன்பேர சந்தைகளில் ரூ.151 லட்சம் கோடிக்கு வர்த்தகம்


புதுடில்லி: நாட்டில் உள்ள, 21 முன்பேர சந்தைகளில், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 
61 சதவீதம் வளர்ச்சிகண்டு, 151 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு, இதே காலத்தில், 94.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, முன்பேர சந்தைகளின் கட்டுப்பாட்டு அமைப்பான, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.உள்நாட்டில், தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகள் அனைத்திலுமாக, பல்வேறு விளைபொருள்கள் மீது, முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், கொத்தவரை, கொண்டைக் கடலை மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றின் மீது மிக அதிகளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. கணக்கீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், இரண்டு மடங்கு அதிகரித்து, அதாவது, 42.91 லட்சம் கோடியிலிருந்து, 
87.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கொத்தவரை மீதான வர்த்தகம், 52 சதவீதம் வளர்ச்சிகண்டு, 11.14 லட்சம் கோடியிலிருந்து, 16.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவைதவிர, கச்சா எண்ணெய் மீதான வர்த்தகம், 32 சதவீதம் அதிகரித்து, 18.38 லட்சம் கோடியிலிருந்து, 24.23 லட்சம் கோடி ரூபாயாகவும், தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 6 சதவீதம் வளர்ச்சிகண்டு, 21.82 லட்சம் கோடியிலிருந்து, 23.11 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், எம்.சி.எக்ஸ். முன்பேர வர்த்தக சந்தையில், 12.21 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, என்.சி.டி.இ.எக்ஸ் (1.72 லட்சம் கோடி ரூபாய்), என்.எம்.சி.இ.(34 ஆயிரத்து 643 கோடி ரூபாய்), ஐ.சி.இ.எக்ஸ்.(20 ஆயிரத்து 687 கோடி ரூபாய்) மற்றும் ஏ.சி.இ. (13 ஆயிரத்து 106 கோடி ரூபாய்) ஆகிய சந்தைகளிலும் அதிகளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், முன்பேர வர்த்தக சந்தையில் முன்னிலையில் உள்ள, எம்.சி.எக்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்வதற்காக, இம்மாத இறுதியில் பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில் ரூ.5,600 கோடிக்கு பங்கு வெளியீடு


மும்பை: சென்ற டிசம்பரில், புதிய மற்றும் உரிமை பங்கு வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள் 5,600 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, நவம்பரில் திரட்டப்பட்ட, 1,601 கோடி ரூபாயை விட, ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகம் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பரை விட, டிசம்பரில் பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 6.6 சதவீதம் சரிவடைந்திருந்தது. இந்நிலையிலும், டிசம்பரில், பங்கு வெளியீடுகள் வாயிலாக, 5,600 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 51 பங்கு வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள், 23 ஆயிரத்து 3 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன. கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 66 பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள், திரட்டிய தொகை, 50 ஆயிரத்து 480 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
சென்ற டிசம்பரில், தகுதி வாய்ந்த நிதி நிறுவனத்திற்கு, பங்கு ஒதுக்கீடு செய்து, ஒரு நிறுவனம் மட்டும், 68 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. ஆனால், நவம்பரில், இதுபோன்ற ஒதுக்கீடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதே மாதத்தில், முன்னுரிமை பங்கு ஒதுக்கீட்டின் மூலம், 19 நிறுவனங்கள், 517 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன. நவம்பரில், 21 முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலம், 169 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது என, "செபி' அமைப்பின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.