Sunday, February 26, 2012

ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய சந்தர்ப்பம்




சமாதானம் மலர்ந்துள்ள இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஜப்பான்
 முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.


இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் விசேட பௌத்த தூதுக் குழுவினருடன் இன்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.


இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் பொருளாதார மலர்ச்சியால் வலுவான எதிர்கால பயணத்திற்குள் பிரவேசித்துள்ள இலங்கையை, விரைவில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 
வருடங்கள் பூர்த்தியாகும் இத்தருணத்தில் நீண்டகால நட்பு தொடர்பாகவும் ஜனாதிபதி நினைவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாம் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகைதர எதிர்பார்த்திருந்ததாக ஜப்பானின் விசேட பெளத்த தூதுக்குழுவிற்கு தலைமைதாங்கும் காங்கோஜி விஹாரையின் விஹாராதிபதி சுஜிமுரா தய்சென் தேரர் கூறியுள்ளார்.


இந்த சந்திப்பை அடுத்து அலரி மாளிகை வளாகத்தில் நடப்பட்டுள்ள ஜய ஸ்ரீ மாபோதி முன்பாக தேரர்கள் ஜனாதிபதிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் ஆசி வழங்கினர்.

அதிக ஏற்ற, இறக்கத்தில் நாட்டின் பங்கு வர்த்தகம்



மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்ற திங்களன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. ஆக, நான்கு நாட்கள் நடைபெற்ற பங்குவியாபாரத்தில், செவ்வாய் தவிர்த்த, ஏனைய மூன்று வர்த்தக தினங்களில், பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்ததுடன், ஒட்டுமொத்த அளவில், சுணக்கம் கண்டது.
நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் இதுவரையிலுமாக, பங்கு வர்த்தகம் ஏறுமுகமாகத்தான் இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
பொதுவாக, தங்கம், வைரம், வீடு, மனை, கட்டில், பீரோ போன்றவற்றின் விலை குறையும்போது தான், அவற்றை வாங்குவர். ஆனால், பங்கு வர்த்தகத்தில் மட்டும்தான், பங்குகளின் விலை உயரும் போது, அதை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கடந்த இரண்டு மாதங்களாக சந்தையில் இதுதான் நடக்கிறது.
சந்தை இறக்கத்திற்கு காரணம் : சமீப காலமாக, ஈரான் பிரச்னையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது, பங்குச் சந்தையில் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை கூடுவதால், இதர பொருட்களின் விலையும் கூடும். 
இதனால், நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். அது பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர வாய்ப்புள்ளது.
வெள்ளியன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 155 புள்ளிகள் சரிவடைந்து, 17,923 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 54 புள்ளிகள் குறைந்து, 5,429 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நடப்பு வாரத்தில் மட்டும், "சென்செக்ஸ்' 366 புள்ளிகள் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகிதம் : கடன் மற்றும் டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் குறையவில்லை. இது, ஒரு பெரிய குறைதான். பல வங்கிகளும், தனியார் நிறுவனங்களும், டிபாசிட்டிற்கு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக வட்டி வழங்கி வருகின்றன. இது, சந்தையில் பணப்புழக்கம், குறைவாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. ரிசர்வ் வங்கி, வரும் மார்ச் மாதத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் அல்லது ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே, டிபாசிட் செய்ய விரும்புவர்களுக்கு, தற்போதைய சூழ்நிலை சாதகமானதாகும். ஏனெனில், டிபாசிட்டிற்கு 11 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
புதிய வெளியீடுகள் : முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்.) நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதன் பங்குகள் வேண்டி, 54 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. 
குறிப்பாக, சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து, 24 மடங்கிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 2 லட்சம் ரூபாய்க்கு பங்குகள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, குறைந்த அளவிற்கே பங்குகள் கிடைக்கும். ஒரு பங்கில், 500 ரூபாய் லாபம் கிடைப்பதாகக் கொண்டால், 3,000 ரூபாய் வரையில் தான் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எம்.சி.எக்ஸ்.சின் பங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களம் இறங்கக்கூடும். நல்ல வெளியீடுகளாகப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிடில், இழப்பு ஏற்படும்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள, ஓ.என்.ஜி.சி. நிறுவனமும், பங்கு வெளியீட்டில் களமிறங்க வாய்ப்புள்ளது. தற்போது, பங்குச் சந்தை நன்கு உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளக் கூடும்.
சிட்டி பேங்க் : சிட்டி பேங்க், எச்.டீ.எப்.சி., நிறுவனத்தில் கொண்டிருந்த, 10.92 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 7,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்பு, 3,000 கோடி ரூபாய் அளவிற்கு மேற்கொண்ட முதலீடு, இன்று 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை : தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் விலை உயர்ந்துள்ளது. இதற்கு, சீன நாடு அதிக அளவில் தங்கம் வாங்குவது தான் காரணம். இதுநாள் வரை, உலக அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், சென்ற காலாண்டில், தங்கம் வாங்குவதில், சீனா, இந்தியாவை விஞ்சியுள்ளது. 
மேலும், அமெரிக்கா அதன் பொருளாதார மேம்பாட்டிற்காக, புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
வரும் வாரம் எப்படி இருக்கும்? : எம்.சி.எக்ஸ். நிறுவனத்தின் புதிய வெளியீட்டில் பங்குகள் வேண்டி 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான தொகை முடக்கப்பட்டுள்ளது. மிக அதிக அளவிலான தொகை ஒரு நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் குவிக்கப்பட்டுள்ளது. இதன் பங்குகள், பங்குச் சந்தையில், பட்டியலிடப்படும்போது, எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர். வரும் வாரத்தில், பங்கு வர்த்தகத்தில், அதிக ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அதிக அளவில் இறக்கம் இருக்காது எனலாம்.
- சேதுராமன் சாத்தப்பன் -