Tuesday, February 21, 2012

முன்பேர சந்தைகளில் ரூ.151 லட்சம் கோடிக்கு வர்த்தகம்


புதுடில்லி: நாட்டில் உள்ள, 21 முன்பேர சந்தைகளில், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 
61 சதவீதம் வளர்ச்சிகண்டு, 151 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு, இதே காலத்தில், 94.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, முன்பேர சந்தைகளின் கட்டுப்பாட்டு அமைப்பான, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.உள்நாட்டில், தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகள் அனைத்திலுமாக, பல்வேறு விளைபொருள்கள் மீது, முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், கொத்தவரை, கொண்டைக் கடலை மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றின் மீது மிக அதிகளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. கணக்கீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், இரண்டு மடங்கு அதிகரித்து, அதாவது, 42.91 லட்சம் கோடியிலிருந்து, 
87.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கொத்தவரை மீதான வர்த்தகம், 52 சதவீதம் வளர்ச்சிகண்டு, 11.14 லட்சம் கோடியிலிருந்து, 16.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவைதவிர, கச்சா எண்ணெய் மீதான வர்த்தகம், 32 சதவீதம் அதிகரித்து, 18.38 லட்சம் கோடியிலிருந்து, 24.23 லட்சம் கோடி ரூபாயாகவும், தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 6 சதவீதம் வளர்ச்சிகண்டு, 21.82 லட்சம் கோடியிலிருந்து, 23.11 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், எம்.சி.எக்ஸ். முன்பேர வர்த்தக சந்தையில், 12.21 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, என்.சி.டி.இ.எக்ஸ் (1.72 லட்சம் கோடி ரூபாய்), என்.எம்.சி.இ.(34 ஆயிரத்து 643 கோடி ரூபாய்), ஐ.சி.இ.எக்ஸ்.(20 ஆயிரத்து 687 கோடி ரூபாய்) மற்றும் ஏ.சி.இ. (13 ஆயிரத்து 106 கோடி ரூபாய்) ஆகிய சந்தைகளிலும் அதிகளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், முன்பேர வர்த்தக சந்தையில் முன்னிலையில் உள்ள, எம்.சி.எக்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்வதற்காக, இம்மாத இறுதியில் பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.