Tuesday, February 21, 2012

டிசம்பரில் ரூ.5,600 கோடிக்கு பங்கு வெளியீடு


மும்பை: சென்ற டிசம்பரில், புதிய மற்றும் உரிமை பங்கு வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள் 5,600 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, நவம்பரில் திரட்டப்பட்ட, 1,601 கோடி ரூபாயை விட, ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகம் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பரை விட, டிசம்பரில் பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 6.6 சதவீதம் சரிவடைந்திருந்தது. இந்நிலையிலும், டிசம்பரில், பங்கு வெளியீடுகள் வாயிலாக, 5,600 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 51 பங்கு வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள், 23 ஆயிரத்து 3 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன. கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 66 பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள், திரட்டிய தொகை, 50 ஆயிரத்து 480 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
சென்ற டிசம்பரில், தகுதி வாய்ந்த நிதி நிறுவனத்திற்கு, பங்கு ஒதுக்கீடு செய்து, ஒரு நிறுவனம் மட்டும், 68 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. ஆனால், நவம்பரில், இதுபோன்ற ஒதுக்கீடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதே மாதத்தில், முன்னுரிமை பங்கு ஒதுக்கீட்டின் மூலம், 19 நிறுவனங்கள், 517 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன. நவம்பரில், 21 முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலம், 169 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது என, "செபி' அமைப்பின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.