Friday, March 2, 2012

"சென்செக்ஸ்" 169 புள்ளிகள் வீழ்ச்சி



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலகின் ஒரு சில பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், விமான சேவை, வங்கி, பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனம், உரம் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 168.71 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,583.97 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,717.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,463.27 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 45.45 புள்ளிகள் குறைந்து, 5,339.75 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,372.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,297.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.