Thursday, March 1, 2012

"சென்செக்ஸ்" 22 புள்ளிகள் உயர்வு "சென்செக்ஸ்' 22 புள்ளிகள் உயர்வு



மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், 18,000 புள்ளிகளை கடந்து ஏற்றத்தில் சென்று கொண்டிருந்த பங்கு வர்த்தகம், மதியத்திற்கு பிறகு 250 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இருப்பினும், வர்த்தகம் முடியும் போது, ஓர் அளவிற்கு முன்னேற்றம் கண்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், வங்கி, நுகர் பொருள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. அதேசமயம், ஓ.என்.ஜி.சி., செயில், விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.56 புள்ளிகள் அதிகரித்து, 17,752.68 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,001.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,677.97 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 9.70 புள்ளிகள் உயர்ந்து, 5,385.20 புள்ளிகளில் நிலைகொண்டது.