Wednesday, February 22, 2012

"சென்செக்ஸ்''139 புள்ளிகள் அதிகரிப்பு "சென்செக்ஸ்' 139 புள்ளிகள் அதிகரிப்பு "சென்செக்ஸ்' 139 புள்ளிகள் அதிகரிப்பு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 17 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு நிவாரண உதவி வழங்க ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த செய்தி, ஐரோப்பிய சந்தைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.இருப்பினும், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்ததையடுத்து, நாட்டின் பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ஸ்டெர்லைட், டாட்டா பவர், விப்ரோ மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 139.26 புள்ளிகள் அதிகரித்து, 18,428.61 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,470.86 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,293.80 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும்,10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 42.85 புள்ளிகள் உயர்ந்து, 5,607.15 புள்ளிகளில் நிலைகொண்டது. இது, கடந்த ஏழு மாதங்களுக்குப் பிறகான உயர்வாகும். இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,621.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,561.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.