Sunday, February 26, 2012

ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய சந்தர்ப்பம்




சமாதானம் மலர்ந்துள்ள இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஜப்பான்
 முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.


இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் விசேட பௌத்த தூதுக் குழுவினருடன் இன்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.


இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் பொருளாதார மலர்ச்சியால் வலுவான எதிர்கால பயணத்திற்குள் பிரவேசித்துள்ள இலங்கையை, விரைவில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 
வருடங்கள் பூர்த்தியாகும் இத்தருணத்தில் நீண்டகால நட்பு தொடர்பாகவும் ஜனாதிபதி நினைவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாம் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகைதர எதிர்பார்த்திருந்ததாக ஜப்பானின் விசேட பெளத்த தூதுக்குழுவிற்கு தலைமைதாங்கும் காங்கோஜி விஹாரையின் விஹாராதிபதி சுஜிமுரா தய்சென் தேரர் கூறியுள்ளார்.


இந்த சந்திப்பை அடுத்து அலரி மாளிகை வளாகத்தில் நடப்பட்டுள்ள ஜய ஸ்ரீ மாபோதி முன்பாக தேரர்கள் ஜனாதிபதிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் ஆசி வழங்கினர்.